திருவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்

siruvachur mathurakaliamman

அமைவிடம்
     தமிழ் நாட்டிலே தில்லை, திருவாலங்காடு, உறையூர், மற்றும் சிறுவாச்சூரிலே காளி அன்னை சிறப்பாக கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றாள். சிறுவாச்சூர் என்னும் திருத்தலத்திலே மதுர காளியாக எழுந்தருளியிருக்கிறாள்.

     திருச்சி சென்னை மார்க்கத்தில் பெரம்பலூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். சிறுவாச்சூர் பைபாஸ் சாலையிலிருந்து ஊருக்குள்ளே 1 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் மதுரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

அமைப்பு
     திருக்கோவில் முன்புறம் இராஜ கோபுரம் உள்ளது. கோயிலின் முன்னே நமக்கு வலப்பக்கம் ஓர் ஏரியும், இடப்பக்கம் ஒரு குளமும் உள்ளன. திருக்குளம் ஆதி சங்கரரால் உருவாக்கப்பெற்றது. துறையூர்க் கோட்டையின் குறுநில மன்னர்கள் கோயிலை எழுப்பினர். கோவிலின் உட்சென்றவுடன் இடப்புறம் ஒரு மண்டபமும் அதன் எதிரில் ஒரு கிணறும் உள்ளது. தல விருட்சம் மருத மரமாகும் தீர்த்தம் ஈசான திலையில் உள்ள திருக்குளமாகும். பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.

தலவரலாறு
     ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழி படும் தெய்வமாக விளங்கினாள். அம்மையிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன்.

     மந்திரவாதியின் கொடுமையால் அல்லலுறும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரை காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் இடம் கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள்.

     அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான். அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களை காத்து அருளினால் மதுர காளியம்மை.

     பின் செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்ளுகிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம். மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.

siruvachur mathurakaliamman

     ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை. திருவடியில் அரக்கன் இல்லாததால் அழிக்கும் தொழிலில் காட்சி தராமல் அருளும் நிலையிலே தரிசனம் தருகின்றாள் அம்மை.

நேர்த்திக் கடன்
     செல்லி அம்மனுக்கு குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை பிறந்தால் "பால் முடி" கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.

பெயர்க் காரணம்
     மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுர காளியம்மனாக மாறியது என்று நம்பப்படுகின்றது. சினங்கொண்டு இங்கு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் - இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

     அம்பிகையே சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவர்க்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் அடைந்தபோது அமைதி கொண்ட அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானள் என்பது செவிவழிச் செய்தி.

siruvachur mathurakaliamman

தலபெருமை
     அன்னை, இங்கு நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியன வற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள்.

     ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வடிவத்தோடே அன்னை சிலையானாள் என்றும் அந்தச் சிலையையே ஆதிசங்கரர் இங்குப் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்வதுண்டு.

     மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா ஆலயம் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.

     சிறுவாச்சுருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம்.

திறக்கும் நேரம்
     காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.

     1 1/2 மணியளவில்தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

திருவிழா
     சித்திரை திங்களில் அமாவாசைக்கு அடுத்த செவ்வாயன்று அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் அதற்கடுத்த செவ்வாயன்று காப்புக்கட்டி திருவிழாவும் தொடங்கும். 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் மலை வழிபாடு, வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கியத் திருவிழாவாகும்.

     8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர். அன்று இரவு சிறப்பு பூஜையும் மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும். புதன்கிழமை அன்று, பக்தர்கள் மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். வியாழனன்று செல்லியம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனியும் வெள்ளிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டுடன் அந்த வருடத்துத் திருவிழா நிறைவடையும்.

     ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி பதினெட்டாம் பெருக்கு, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசியில் மஹா சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் திருக்கோவில் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றது.

பிரார்த்தனை
     பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன.

     இத்தளத்தில் மாவிளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. வெளியில் இருந்து மாவு தயாரிக்காமல், ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டு வந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு தயார் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இதற்காக மாவு இடிக்க தனியிடம் ஒதுக்கப்பட்டு அங்கு உரல்களும் உலக்கைகளும் ஆலயம் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளன.

     இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.

     இக்கோயிலில் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது. மேலும் இக்கோயிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது.

செல்லியம்மன் ஆலயம்
     மதுர காளியம்மன் ஆலயத்திற்கு மேற்கே ஐந்து கிலோ மீட்டர் சென்றால் மலையடிவாரம் வருகிறது. மருத மரங்களும், புளிய மரங்களும் நிறைந்து பசுமையாகக் காணப்படுகிறது இந்த இடம். அருகே, சிற்றோடை ஒன்றும் உள்ளது. பெரியசாமி மலை என்பது இந்த இடத்தின் பெயர். மலையடிவாரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு மலையில் ஏறிச் சென்றால் செல்லியம்மன் ஆலயத்தைக் காணலாம். கரடு முரடான பாதை இது. ஏறிச் செல்வதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். எந்த வாகனத்திலும் செல்ல இயலாது. செல்லியம்மன் ஆலயம் திறந்த வெளியாய் உள்ளது. மேற்கூரையோ, சுற்றுச் சுவர்களோ எதுவுமே இங்கு கிடையாது. இங்கே செல்லியம்மனின் அண்ணன் பெரியசாமி உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருக்க, அருகே செல்லியம்மன் அமைதியே உருவாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.

     அருகே, லாடசாமி, பெரிய கண்ணி ஐயா, கிணத்தடி ஐயா முதலிய தெய்வங்கள் சுட்ட மண்ணால் ஆக்கப்பட்ட திருமேனிகள் கொண்டுள்ளனர். சூலங்களும் நடப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

     செல்லி அம்மனுக்கு ஆடு பலியிடுவதாக வேண்டிக் கொண்டவர்கள், செல்லியம்மனின் முன்னே உள்ள இடத்தில் ஆடுகளை பலியிடுகின்றனர்.

     மலையடிவாரம் வருவதற்கோ, செல்லியம்மன் ஆலயம் வருவதற்கோ பெண்களுக்கு அனுமதி கிடையாது. எனவே, ஆண்கள் மலைக் கோவில் செல்லும்போது பெண்கள் மதுர காளியம்மன் கோவிலிலோ, அருகிலோ தான் தங்கிவிட வேண்டும்.

     செல்லியம்மன் ஆலயத்திற்கு சற்று தொலைவில் ஆத்தடி குருசாமி கோவில் உள்ளது. கம்பப் பெருமாள் என அழைக்கப்படும் சன்னதி சிறிது தூரத்தில் தகரக் கொட்டகையுடன் உள்ளது.

முகவரி
அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்,
சிறுவாச்சூர், பெரம்பலூர் வட்டம் மற்றும் மாவட்டம்
பின்கோடு - 621113
தொலைபேசி எண்.04328-2325444
கைபேசி : 8056553356

ஸ்ரீ மதுரகாளியம்மன் போற்றி
அகரமென உயிர்க்கு ஆதியே போற்றி
ஆருயிக் குயிராய் அமைந்தாய் போற்றி
இச்சா சக்தியாய் இயைந்தாய் போற்றி
ஈசன் அருளுக் கினியாய் போற்றி
உண்மைப் பொருளாய் ஒளிர்வாய் போற்றி
ஊக்கமும் உணர்வும் உதவுவாய் போற்றி
எழில் தரும் இயற்கை பொருளே போற்றி
ஏழிசை தாம் இசைப்பாய் போற்றி
ஐயம் தவிர்க்கும் அன்னையே போற்றி
ஒன்றென விளக்கும் உணர்வே போற்றி
ஓதாதுணர்ந்திடும் ஒளியே போற்றி
ஔவியம் நீக்கிய அருளே போற்றி
அஃகிய பொருளாய் அமைந்தாய் போற்றி
கண்ணுள் மணியாய் கலந்தாய் போற்றி
காட்சிப் பொருளாய் விரிந்தாய் போற்றி
கிரியா ச்க்தியாய் கிளர்ந்தாய் போற்றி
கீழ்மை தவிர்த்தெம்மைக் காப்பாய் போற்றி
குணமெனும் குன்றாய் நிகழ்வாய் போற்றி
கூர்த்த் மதியினைக் கொடுப்பாய் போற்றி
கொஞ்சும் குரல் கேட்டிரங்குவாய் போற்றி
கேட்ட வரங்கள் ஈவாய் போற்றி
கைதவம் ஒழித்தருள் கடலே போற்றி
கொண்டல் நிற்ப்பூங் கொடியே போற்றி
கோதில் உள்ங்கொடி கொள்வாய் போற்றி
பெயர்க் கனியே போற்றி
ஙப்போர் மழவேந்தரசியே போற்றி
சதுர்மறைக் கிறைவியே தாயே போற்றி
சான்றோர் தவத்தின் உருவே போற்றி
சிந்தை குடிகொள் தெய்வமே போற்றி
சீரும் திருவும் அருள்வாய் போற்றி
ஸுருதிப் பொருளெனெத் தோற்றுவாய் போற்றி
ஸூரியச் சந்திரச்சுடரே போற்றி
செம்பொருளாகத் திகழ்வாய் போற்றி
சேவடி பணிவோர் திருவே போற்றி
சைவ னெறியிற் றழைப்பாய் போற்றி
சொல்லும் பொருளும் துலக்குவாய் போற்றி
சோர்வினைப் போக்கும் சோதியே போற்றி
சௌபாக்கிய மருள் தாயே போற்றி
ஞான சக்தியாய் நவில்வாய் போற்றி
ஞேயம் உறுமகம் நிறைந்தாய் போற்றி
டம்பம் தவிர்க்கும் தாயே போற்றி
இணக்கம் பெறுவோர்க்கு இறைவியே போற்றி
தளிர்போல் மேனி ஒளிர்வாய் பொற்றி
தாமரைச் சீரடி அமைந்தாய் போற்றி
திங்கள் முகத்துத் திருவே போற்றி
தீம்பால் மொழியே செப்புவாய் போற்றி
துடியிடை பெற்ற சுவர்ணமே போற்றி
தூமணி ஆரமிடற்றாய் போற்றி
தெளிந்த நன் நெஞ்சத் தேவியே பொற்றி
தேன் போல் இனிக்கும் செஞ்சொலா போற்றி
தைவிகம் போற்றுவார் தண்ணிழல் போற்றி
தொல்லறப் பயனாய் துலங்குவாய் போற்றி
புதுமை யாவும் புதுக்குவாய் போற்றி
பூரண இன்பப் போழியே போற்றி
பெண்மைக் கரசாய் பிறங்குவாய் போற்றி
பேரின் பக் கடல் ஆவாய் போற்றி
பைம்பொன் நிறத்துப் பாவாய் போற்றி
பொறையே பூணாய் பூண்பாய் பொற்றி
போற்றுவார்க் கிரங்கும் தாயே போற்றி
மலருள் மணமென வயங்குவாய் போற்றி
மாதவத் தோட்கருள் மாதா போற்றி
மிடிதவிர்த் தாளும் விமலையே போற்றி
மீனவர் மகளாய் விளங்குவாய் போற்றி
முடிவிலா ஞான முதல்வியே போற்றி
மூர்த்திகள் பலவாய் தோற்றுவாய் போற்றி
மென்மைகள் யாவிலும் மிளிர்வாய் போற்றி
மேதினிக் கரசியாய் விளஙுவாய் போற்றி
மையல் நீக்கிடும் ஐயை போற்றி
மொழிந்திடும் முத்தமிழ்க் குதவுவாய் போற்றி
மோனளத் தமர்ந்த முழுமுதல் போற்றி
மௌவலம் குழல் நீள் மயிலே போற்றி
இயல் இசை நாடகத் தியைவாய் போற்றி
அரவமோ டாடிடும் அம்பிகை போற்றி
இலகொளி பரப்பிடும் எந்தாய் போற்றி
வரங்கள் பலவும் வழங்குவாய் போற்றி
வான்மழை யாகிக் காப்பாய் போற்றி
விண்ணும் மண்ணும் விரிந்தாய் போற்றி
வீடுபே றளிக்கும் மெய்ப்பொருள் போற்றி
வெற்றியின் சின்னமாய் மிளிர்வாய் போற்றி
வேதப் பொருளின் விளைவே போற்றி
வையங் காக்கும் மணியே போற்றி
அழகெலாம் ஒன்றாய் அமைந்தாய் போற்றி
இளமையில் என்றும் இருப்பாய் போற்றி
அறநிலை ஆற்றின் அமிழ்தே போற்றி
அனந்தமும் நீயே ஆவாய் போற்றி
கவின் பெறு கற்புக் கனலெ போற்றி
செழியன் அநீதி தீர்த்தாய் போற்றி
செல்லிக் குதவிய திருவே போற்றி
திரிசூ லங்கை திகழ்வாய் போற்றி
மதுரகாளி மாதா போற்றி
எல்ல உயிரும் ஈன்றாய் போற்றி
நல்லவை யாவையும் நல்குவாய் போற்றி
மங்களம் முழங்கும் மணியே போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி
போற்றி போற்றி ஜெயஜெய போற்றியே