தமிழ் வருடப் பிறப்பு


mayanakollai

சித்திரை முதல் நாளே தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப் படுகிறது, இது ஏப்ரல் 14 அல்லது 15-ம் தேதிகளில் வருகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இவ்விழாவினை கொண்டாடுகின்றனர்.

பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

சித்திரை திருநாள், வசந்த காலத்தின் ஆரம்பமாக கருதப்படுவதால் இந்த நாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கேரளாவில் சித்திரை விஷூவாக கொண்டாடப்படுவது வழக்கம். இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.

நவகிரகங்களில் தலைமை கிரகமாகமான சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஏற்பட்டன. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதுதான் மாதப்பிறப்பு. மேஷம் முதல் மீனம் வரை ஒரு சுற்று முடிந்து, மீண்டும் மேஷத்தில் தனது புதிய பயணத்தை சூரிய பகவான் துவங்கும் நாளே தமிழ் புத்தாண்டு.

சித்திரை வருடப்பிறபு அன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நடைபெறுவது வழக்கம். புத்தாண்டிற்கு முதல் நாளே பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மங்கள பொருட்களை காண்பதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், மங்கலப் பொருட்களையும் முதலில் பார்க்க வேண்டும்.

முந்தைய காலத்தில் தினமும் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் இருந்தது. இன்றைக்கும் திருப்பதியில் வெங்கடேஸ்வர சுவாமி சன்னதியில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் உள்ளது. இவ்வாறு பஞ்சாங்கம் படிப்பதை பஞ்சாங்க படனம் என்று சொல்வார்கள்.

புத்தாண்டு அன்று தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி மற்றும் சுக்கு அனைத்தும் சேர்த்து கொதிக்க வைத்த நீரில் நீராடினால் நல்ல பலன்களை பெறலாம் என்பது ஐதீகம். இது மருத்து நீர் வைத்தல் எனப்படுகிறது.

புத்தாண்டு அன்று பானகம், நீர், மோர், பருப்புவடை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சுவைக்க வேண்டும். அதனால் தான் மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால் வடை போன்றவை இடம் பெற்றிருக்கும்.

நம் மூதாதையோர் காலத்தில் வீட்டின் தலைவி சுப நேரத்தில் மூலிகைப் பொட்டலம் ஒன்றை கிணற்றுக்குள் போடுவார். புத்தாண்டு அன்று அந்த தண்ணீரை கிணற்றில் இருந்து எடுப்பது தான் கை விசேஷ தினமாக கருதப்பட்டது. நாளடைவில் புத்தாண்டு தினத்தில் பணம் கொடுப்பது என்றாக மாறியது.

வீட்டில் உள்ள குடும்பத் தலைவரிடம் இருந்து புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல் மற்றும் பணத்தினை கை விசேஷமாக பெற்றுக்கொள்வார்கள். மூத்தோர்களிடமிருந்து கை விசேஷம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பாரம்பரியமான நிகழ்ச்சியான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகளுடன் கும்மியடித்தல், சொக்கட்டான், மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், சைக்கிள் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தில் நடைபெறும்.

நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப்படும் சமூக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் அனைவரும் கடைப்பிடிப்பது வழக்கம்.