ஏகாதசி சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம். ருக்மாங்கதன், விதர்ப்ப நாட்டின் மன்னன். அவன் மனைவி சந்தியாவளி. நாட்டை வளம் குன்றாமல், மக்கள் மனம் வாடாமல் பாதுகாத்து வந்தான் ருக்மாங்கதன். நெறி தவறாத அவனுடைய மைந்தன் தர்மாங்கதன். அவன் அமைத்திருந்த நந்தவனத்தின் அமைதியையும் அழகையும் பார்த்த முனிவர், அங்கே தவமிருக்க தலைப்பட்டார். திடீரென்று அந்த நந்தவனத்தில் மலர்கள் குறைய ஆரம்பித்தன. மலர்கள் குறைய காரணம், அதற்கான பருவம் முடிந்து போனதால் அல்ல. வேறு எவரோ அதைப் பறிக்கிறார்கள் என்று பட்டது மன்னனுக்கு. `அவர்களை கண்டுபிடித்து அழைத்து வா' என்று காவலருக்கு ஆணையிட்டான் காவலர்கள் வேறு எவரும் தென்படாததால் முனிவர்தான் காரணம் என்றெண்ணி அவரைக் கொண்டுபோய் மன்னன் முன் நிறுத்தினர். ருக்மாங்கதன் அதிர்ந்து போனான். தவச்சீலர் ஒருவரை திருடனாகக் கருதிய காவலர்களின் மடமை கண்டு வெகுண்டான். ஓடிவந்து முனிவரை பணிந்தான். “மகரிஷி, என்னை மன்னியுங்கள். நந்தவனத்தில் யாரோ தினமும் மலரை கொய்கிறார்கள். அவர்களை அழைத்து வரச்சொன்னேன். இவர்கள் அறியாமையால் தங்களை அழைத்து வந்துவிட்டார்கள்” என்று சொல்லி கலங்கினான். அவனுடைய சொற்களால் மனம் நிறைந்த முனிவர் சொன்னார், “ருக்மாங்கதா! கொம்மட்டி விதைகளை தோட்டத்தில் ஆங்காங்கே தூவு. விரைவில் மலரைப் பறிப்பது யார் என்று புரியும்” என்று புன்னகைத்தார். முனிவர் சொன்னபடியே செய்தான் மன்னன். விதைகள் முளைவிட்டன. கொடியாகிப் படர்ந்தன. மரங்களிலும், செடிகளிலும் பரவித் துளிர்த்தன. ஒருநாள் காலை ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். காவலர் மூலம் விவரம் அறிந்த மன்னன் அங்கு விரைந்தான். மன்னரை கண்ட அவள் பேச ஆரம்பித்தாள். “மன்னா! நான் தேவலோகத்தை சேர்ந்தவள். விஷ்ணு பூஜைக்காக தினமும் மலர்களை நானும், என் தோழிகளும்தான் பறித்துச் சென்றோம். இன்று என் காலில் இந்த கொடி சுற்றியது. இது அசுத்தமானது. அதனால் என்னால் தேவலோகம் செல்ல முடியவில்லை. என்னுடன் வந்தவர்கள் சென்று விட்டார்கள்” என்று கவலை ததும்ப சொன்னாள் அவள். அதைக் கேட்ட ருக்மாங்கதன் தடுமாறினான். விஷ்ணு பூஜைக்காகத்தான் இந்த நந்தவனத்தின் மலர்கள் பறிக்கப்பட்டன என்பதே ஆனந்தமானது. அந்த பணியில் ஈடுபட்ட பெண்ணை மீண்டும் தேவலோகம் செல்ல முடியாமல் செய்தது தன்னுடைய மூடத்தனம், பாவம் என்று கலங்கினான். “தாயே! இந்த தவறுக்கு பிராயச்சித்தமே இல்லையா? என்ன செய்தால் தாங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும்? அதைச் சொல்லுங்கள்”' என்று வேண்டினான். அதைக்கேட்ட அந்த பெண் சற்று யோசித்தபின் சொன்னாள், “ஏகாதசி விரதத்தின் பலனை எவரேனும் தானமாக தந்தால், நான் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும்” என்றாள். ருக்மாங்கதனே கேள்விப்படாத விஷயம். வேறு யாருக்குத் தெரிந்திருக்கும்ப அவனுடைய குழப்பத்துக்கும் அவளே பதில் சொன்னாள். “உன் அரண்மனையில் சமையல் செய்யும் பெண் ஒருத்தி, ஏகாதசி விரதம் இருந்திருக்கிறாள். அவள் அந்த விரத பலனை கொடுத்தால் போதும்” என்றாள். ருக்மாங்கதன் ஆச்சரியமாக கேட்டான், “அவளுக்கு எப்படித் தெரியும்?” என்றான். “இல்லை மன்னா, அவளுக்கும் தெரியாது, ஒருநாள் சமையல் சரியில்லை என்று சொல்லி காவலில் வைத்தாள் உன் மனைவி. அன்று மதியம்தான் அவள் சாப்பிட்டிருந்தாள். மறுநாளும் அவளுக்கு உணவு தரப்படவில்லை. அவள் சிறைப்பட்ட நாள் தசமி. உணவு தரப்படாத நாள் ஏகாதசி. மறுநாள் விடுதலை பெற்றவள் உணவருந்தியது துவாதசி அன்று. அதனால் அவளை அறியாமலேயே ஏகாதசி விரத பலன் அவளுக்கு கிடைத்தது” என்றாள். தேவலோகப் பெண் சொன்ன விளக்கம் மன்னனை வியக்க வைத்தது. அந்த பெண் யாரென்று அறிந்து, அவளது தானத்தால், தேவலோகப் பெண்ணை மீண்டும் தேவலோகம் செல்ல வைத்தான். அதோடு ஏகாதசி விரதம் அவனுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள அனைவரும் ஏகாதசி விரதம் மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டான். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க, அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்கக லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாறி சொர்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் கிருஷ்ணரிம் முறையிட அதற்கு பகவான் கிருஷ்ணர் ஏகாதசி அன்று தானியம், பருப்பு வகைகள், பயறுவகைகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூராமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார். ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு, ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும்.ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் “கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!” என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். குழந்தைகள், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. |